பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்னத்திரை நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரபல சின்னத்திரை நடிகர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கன்னடம், தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சரித் பாலப்பா. இவர் மீது 29 வயதான சின்னத்திரை நடிகை பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்துள்ளார். இந்த நடிகைக்கு பாலப்பா கடந்த 2017ல் அறிமுகமாகி இருக்கிறார். தொழில்ரீதியாக பழக ஆரம்பித்த இவர்களுக்குள் நட்பும் வளர்ந்திருக்கிறது. ஆனால், ஒருக்கட்டத்தில் நடிகை தனியாக இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் சரித் பாலப்பா.
வலுக்கட்டாயமாக தன்னுடன் உறவு வைத்துக் கொண்டது மட்டுமல்லாது நண்பர்களுடன் சேர்ந்தும் தனக்கு கடந்த ஓராண்டாக பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாகவும் அந்த நடிகை கர்நாடக காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார். மேலும், தனது அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் எனவும் மிரட்டி பணம் பறித்திருக்கிறார். இதற்காக செல்வாக்கு மிக்க பிரபலங்கள், அரசியல்வாதிகள் தொடர்புகளை சரித் பயன்படுத்தினார் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல், பணம் பறிப்பு, மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் சரித் மீது காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறது. நேற்று ராஜராஜேஸ்வரி நகர் காவல்துறையினர் சரித்தை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விஷயம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.