சன்னி லியோனி கோபம் முதல் விஜய் வாழ்த்து வரை: டாப் 5 சினிமா நியூஸ்


சன்னி லியோனி கோபம்: சத்தீஸ்கர் மாநிலத்​தில், திரு​மணமான பெண்​களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்​கில் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை, அம்மாநில அரசு செலுத்தி வருகிறது. இந்த திட்​டத்​தில் நடிகை சன்னி லியோனி பெயரில் தொடங்​கப்​பட்ட வங்கிக் கணக்​குக்கு மாதம் ரூ.1000 அனுப்​பப்​பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்​தனர். மோசடி செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலை​யில், நடிகை சன்னி லியோனி தனது சமூக வலைதளப் பக்கத்​தில், “எனது பெயரை​யும் அடையாளத்​தை​யும் தவறாகப் பயன்​படுத்தி மோசடி​யில் ஈடுபட்​டிருப்பது துரதிர்​ஷ்ட​வச​மானது. பெண்​களுக்கு அதிகாரமளிக்​க​வும் அவர்கள் பயனடைய​வும் உருவான திட்​டத்தில் இப்படியொரு மோசடி நடந்​திருப்பது வருந்​தத்​தக்​கது. இச்செயலை வன்மை​யாகக் கண்டிக்​கிறேன். இதுபற்றி முழு​மையாக விசாரிக்​கும் அதிகாரி​களின் முயற்சி​களுக்கு ஆதரவளிக்​கிறேன்” என்று தெரி​வித்​துள்ளார்.

அடுத்த நோலன் படம்: பிரபல ஹாலிவுட் இயக்​குநர் கிறிஸ்​டோபர் நோலனின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்​களாக வெளி​யாகிவந்தன. இந்நிலை​யில், யுனிவர்சல் பிக்​சர்ஸ் இதுபற்றி அதிகாரப்​பூர்​வமாக அறிவித்​துள்ளது. நோலனின் 13-வது படமான இதற்கு ‘தி ஒடிஸி’ என்று தலைப்பு வைத்​துள்ளனர். ஹோமரின் கிரேக்க காவியமான ‘தி ஒடிஸி’யை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. புதிய ஐமேக்ஸ் தொழில்​நுட்​பத்​தைப் பயன்படுத்தி உருவாகும் இந்தப்​படம் உலகம் முழு​வதும் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி வெளியாக இருக்​கிறது.

கமல் புகழஞ்சலி: பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் (90) மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “மனிதாபிமானமுள்ள ஒரு கதைசொல்லியை இந்தியா இழந்துவிட்டது. நான் ஒரு குருவை இழந்துவிட்டேன். தனது படங்களின் மூலம், உண்மையான இந்தியாவைத் திரைக்குக் கொண்டு வந்தவர். ஆழமான சமூகப் பிரச்சினைகளைப் படங்களில் பேசிய அவர், சாதாரண விஷயங்களையும் நேசிக்க வைத்தவர்” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

யஷ் சம்பளம்: ‘கே.ஜி.எஃப்’ புகழ் யஷ் அடுத்து நிதேஷ் திவாரி இயக்​கும் ‘ராமாயணம்’ படத்​தில் ராவணனாக நடித்து வருகிறார். இதில் ரன்பீர் கபூர் ராமராக​வும் சாய் பல்லவி சீதை​யாக​வும் நடிக்​கின்​றனர். ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, சன்னி தியோல் என பலர் நடிக்​கின்​றனர். இரண்டு பாகங்​களாக இந்தப் படம் தயாராகிறது. இந்தப் படத்​தில் நடிகர் யஷின் சம்பளம், படத்​தின் விநியோக பங்குடன் சேர்த்து ரூ.200 கோடி என்று செய்திகள் வெளி​யாகி​யுள்ளன.

விஜய் வாழ்த்து: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ இன்று வெளியாகிறது. படக்குழுவை மென்ஷென் செய்து எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் விஜய், ‘ப்ளாக்பஸ்டர் வெற்றிக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

x