உறுதியாகிறது வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணி! 


சென்னை: சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இருவரும் இணையும் படம் உருவாவது உறுதியாகி இருக்கிறது.

‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அதன்பிறகு, சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா இருவரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இவற்றில், சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படப்பிடிப்பு டிச.14-ல் சென்னையில் தொடங்கியது.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25-வது படமாகும். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டீசரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தின் 90% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மிச்சம் உள்ளது. இந்த நிலையில் தான், வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் இணைவது உறுதியாகி இருக்கிறது.

இது குறித்து வெங்கட்பிரபு அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு படம் இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக இணைய வேண்டியதாக இருந்தது. ஆனால், அது ‘தி கோட்’ படமாக மாறிவிட்டது. இப்போது சத்யஜோதி நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ண வேண்டும். அதுதான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

கதையின் ஐடியாவை இறுதி செய்துவிட்டோம். திரைக்கதை, காட்சியமைப்புகள் உள்ளிட்டவைக்கான பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு இந்த கதையின் ஐடியா தெரியும். அதே மாதிரி இன்னொரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். கதையாக எழுதி முடித்துவிட்டு, பிறகு நாயகன் யார் என்பதை முடிவு செய்யலாம் என இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

x