அல்லு அர்ஜுன் வீடு மீது கல்வீசி தாக்குதல்


அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ பிரீமியர் காட்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவர் மகன் தேஜ் படுகாயமடைந்தார். இதுதொடர்பான வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, "போலீஸார் அனுமதி மறுத்தும் அல்லு அர்ஜுன் படம் பார்க்கச் சென்றார். தியேட்டருக்கு வெளியே ஒருவர் உயிரிழந்த பின், வீட்டுக்குச் செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியும் கேட்கவில்லை. அப்போது கூட காரில் ஏறி, ரசிகர்களுக்கு கையசைத்த வாறே சென்றார். இதனால் மேலும் பிரச்சினை தலைதூக்கியது. அல்லு அர்ஜுன் என்ன மாதிரியான மனிதர்?” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதற்குப் பதிலளித்த அல்லு அர்ஜுன், “இந்த விவகாரத்தில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. என்னைக் கெட்டவனாகச் சித்திரிக்கச் சதி நடக்கிறது. எனக்கும் குடும்பம் இருக்கிறது. மனைவி, குழந்தையின் இழப்பு எவ்வளவு துயரமானது என்று உணர முடியும். மனித நேயமற்றவன், மோசமானவன் என என்னைச் சித்திரிக்க முயல்வதை நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் என்று கூறிக்கொண்ட சிலர், ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அல்லு அர்ஜுனின் வீட்டுக்குச் சென்றனர். ரேவதியின் குடும்பத்துக்கு நியாயம் வேண்டும் என்று கூறி அவர் வீட்டுக்குள் கற்களை வீசி எறிந்தனர். வீட்டின் நுழைவு வாயிலில் இருந்த பூந்தொட்டிகளை அடித்து உடைத்தனர். அங்கு வந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

x