சென்னை: இந்த வருடத்தில் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முன்னணி ஹீரோக்களின் பல படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யாமல் சொதப்ப, ஆச்சரியமாக பல சிறுபட்ஜெட் படங்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. அவை என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
’லவ்வர்’:
பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் ’ஜெய்பீம்’ புகழ் மணிகண்டன் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. டாக்ஸிக் காதலை மையப்படுத்தி ரூ. 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் சுமார் ரூ. 40 கோடி வசூல் பெற்றது குறிப்பிடத்தக்கது.
’மகாராஜா’:
நடிகர்கள் விஜய்சேதுபதி, அபிராமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் இந்த வருடம் ஜூன் மாதம் வெளியான படம் ‘மகாராஜா’. விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியானது. தன் மகளுக்கு நடக்கும் அநீதியை தட்டி கேட்கும் கதைதான் இதன் ஒன்லைன். ரூ. 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இந்தியாவில் ரூ. 100 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றது. இந்தியாவில் மட்டுமல்லாது சீனாவிலும் வெளியாகி இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
’வாழை’:
இயக்குநர் மாரிசெல்வராஜின் சிறுவயதில் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு வலியும் வேதனையுமாக எடுக்கப்பட்ட படம் ‘வாழை’. நடிகர்கள் கலையரசன், திவ்யா, நிகிலா விமல் உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்ற அதே சமயம், சர்ச்சைகளையும் கிளப்பியது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் சுமார் ரூ. 60 கோடி வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
‘கொட்டுக்காளி’:
‘கூழாங்கல்’ பட இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னாபென் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘கொட்டுக்காளி’. கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளை தோலுரித்துக் காட்டியது இந்தப் படத்தின் அழுத்தமான திரைக்கதை. சர்வதேச அளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும் அள்ளியது. வழக்கத்திற்கு மாறான கிளைமாக்ஸ் பல விவாதங்களை கிளப்பியது. வசூல் ரீதியாக படம் சோபிக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.
‘லப்பர் பந்து’:
இந்த வருடத்தின் ஆச்சர்ய வெற்றி ‘லப்பர் பந்து’ திரைப்படம். நடிகர்கள் ’அட்டக்கத்தி’ தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடிப்பில் யதார்த்த ஸ்போர்ட்ஸ் டிராமாவாக வெளியான இந்தப் படம் அதிரிபுரி ஹிட். தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்தப் படம் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ. 45 கோடி வரை வசூலித்தது.
‘ஜமா’:
கூத்து கலைஞர்களின் வாழ்வியலையும் அவர்களின் வலி அதற்குள் நடக்கும் அரசியல் என யதார்த்தத்திற்கு நெருக்கமாக காட்டிய படம் ‘ஜமா’. இயக்குநராகாவும் நடிகராகவும் முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரை பதித்து கவனம் ஈர்த்தார் பாரி இளவழகன். பாக்ஸ் ஆஃபிசில் பெரிதாக இந்தப் படம் சோபிக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது ‘ஜமா’.