'முஃபாசா: தி லயன் கிங்’ விமர்சனம்!


சென்னை: சிம்பாவின் அப்பா முஃபாசா எப்படி மக்களை வழிநடத்தும் அரசன் ஆனான் என்ற முன் கதைதான் ’முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம். படம் எப்படி உள்ளது என்ற விமர்சனம் பார்க்கலாம்.

தன்னுடைய அம்மா, அப்பாவுடன் வளரும் முஃபாசாவுக்கு வளம் நிறைந்த மிலேலே வனப்பகுதிக்கு சென்று வாழ ஆசை. ஆனால், ஒரு எதிர்பாராத தருணத்தில் முஃபாசா தன் அப்பா, அம்மாவை விட்டு பிரியும் சூழல் வருகிறது. அப்போது, அவனை காப்பாற்றி அரவணைப்பு கொடுப்பது இளவரசன் டாக்கா. தனக்குப் பின்னால் டாக்காதான் அரசன் ஆகவேண்டும் அதற்கு முஃபாசா இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதால் டாக்காவின் தந்தை ஒபாஸி முஃபாசாவை வெறுக்கிறான். பெண் சிங்கங்களுடன் முஃபாசாவை வளர்க்கிறான். ஆனால், டாக்காவின் அம்மா ஈஷா முஃபாசாவையும் தன் மகனாக பாவித்து அன்பு காட்டுகிறாள். வெள்ளை சிங்கக் கூட்டத்தின் தலைவனான கீரோஸூக்கும் முஃபாசாவுக்கும் ஒரு பிரச்சினை வெடிக்க முஃபாசாவை பழிவாங்கத் துடிக்கிறான் கீரோஸ். கீரோஸை சமாளித்து முஃபாசா எப்படி மிலேலே அரசன் ஆகிறான், நண்பனான டாக்கா ஏன் முஃபாசாவிற்கு விரோதி ஆனான், தன்னுடைய அம்மா- அப்பாவுடன் முஃபாசா மீண்டும் சேர்ந்தானா இந்த கேள்விகளுக்கான பதில்தான் ‘முஃபாசா தி லயன் கிங்’ படத்தின் கதை.

பொதுவாக ஹிட் ஆன ஒரு படத்திற்கு ப்ரீக்குவலோ சீக்வலோ வருகிறது என்றால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவும். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுதான் இந்த ப்ரீகுவல், சீக்குவலுக்கு இருக்கும் சவால். அதை எந்த சிக்கலும் இல்லாமல் நிறைவேற்றி இருக்கிறது ‘முஃபாசா: தி லயன் கிங்’. ஒருவேளை முதல் பாகம் பார்க்காமல் இரண்டாம் பாகம் பார்க்கிறார்கள் என்றாலும் இந்தக் கதையுடன் ஒன்றிப்போகும் அளவுக்கு வழக்கமான ஒன்லைனை சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அரச பரம்பரையை சேர்ந்தவர்கள் மட்டும்தான் அரசாள வேண்டும் என்று இல்லாமல், தகுதியான ஒருத்தர் அரசாளலாம் என்ற விஷயத்தை அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார் இயக்குநர் பேரி ஜென்கின்ஸ். முஃபாசா மட்டுமில்லாமல், டாக்காவின் முன்கதையும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் பெரிய ப்ளஸ் தமிழ் டப்பிங். மிக நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் தமிழ் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களுக்கு அர்ஜுன்தாஸ், அசோக்செல்வன், ரோபோ ஷங்கர், சிங்கம்புலி, விடிவி கணேஷ் ஆகிய கலைஞர்களின் வாய்ஸ் ஆக்டிங்கும் சுவாரஸ்யம். அனிமேஷன், விஎஃப்எக்ஸ் எல்லாம் எந்த குறையும் இல்லாமல் வந்திருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் தண்ணீருக்கு அடியில் வரும் பரபர அட்வென்ச்சர் காட்சிகளும் ஆக்‌ஷன் காட்சிகளும் கட்டிப்போடுகிறது.

இடைவேளைக்குப் பிறகு படம் முழுக்க வழக்கமான டெம்ப்ளேட்டுக்குள் சுற்றி வருகிறது. கிளைமாக்ஸ் இதுதான் என தெரிந்த பிறகும் இரண்டாம் பாதி இழுவையாக நகர்கிறது. தமிழ் வசனங்கள் சிறப்பாக இருக்கும் அளவுக்கு பாடல்கள் பெரிதாக ரசிக்கும்படியாக இல்லை. முந்திய பாகத்தின் அளவுக்கு அதிக அட்வென்ச்சர் காட்சிகள் வைப்பதற்கான இடம் இருந்தும், அதிகப்படியாக வசனங்கள் மட்டுமே வைத்து நிரப்பியிருக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில், எல்லோரும் சமம் என்ற சமூகநீதியை 'முஃபாசா தி லயன் கிங்’ படத்தில் வைத்து விஷூவலாக நின்று பேசியுள்ளது படம்.

x