‘சேது’ (1999) படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. அவர் இயக்கி அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள ‘வணங்கான்’ இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
விழாவில், இயக்குநர்கள் சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, மணிரத்னம், கே. பாக்யராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், வசந்த பாலன், தயாரிப்பாளர்கள் தாணு, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, நடிகர்கள் சிவகுமார், விஜயகுமார், சூர்யா, சிவகார்த்திகேயன், ஜி. வி பிரகாஷ், கருணாஸ், தம்பி ராமையா என ஏராளமானோர் கலந்துகொண்டனர். ‘வணங்கான்’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, “‘சேது’ திரைப்படம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நடிகரால் இப்படியெல்லாம் நடிக்க முடியுமா? ஓர் இயக்குநரால் இப்படி ஒரு படத்தை இயக்கமுடியுமா? என்று நினைத்தேன். பல நாட்கள் ‘சேது’வின் தாக்கம் இருந்தது. அடுத்த படம் உன்னை வைத்து இயக்குகிறேன் என பாலா சொன்ன ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. 2000-ம் ஆண்டு எனக்கு அந்த தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கையே இருந்திருக்காது. ‘நந்தா’ பார்த்துவிட்டுதான் கவுதம் வாசுதேவ் மேனன் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்க அழைத்தார். பிறகு இயக்குநர் முருகதாஸ் அழைத்தார். இவை எல்லாவற்றுக்கும் காரணம் பாலாதான். உறவுகளுக்குத் தனது படங்களில் பாலா மதிப்புக் கொடுப்பார். பாலா அண்ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல. அது ஓர் உறவு. நிரந்தரமான உறவு. ‘வணங்கான்’ முக்கியமான படமாக இருக்கும்” என்று நெகிழ்ச்சியாக கூறினார்.