REWIND 2024: இந்த வருடம் அதிகம் பார்க்கப்பட்ட வெப்சீரிஸ் என்னென்ன?


சென்னை: கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு திரைப்படங்கள் மட்டுமல்லாது ஓடிடியில் படங்கள் பார்க்கவும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இதன் பொருட்டே, ஓடிடி தளத்திற்கென்றே தனியாக படங்களும் வெப்தொடர்களும் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட வெப்தொடர்கள் என்னென்ன என்பது பற்றிய தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

’ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்’: இயக்குநர் சஞ்சய் லீலா‌ பன்சாலியின் பிரம்மாண்ட படைப்பு ’ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்’. சுதந்திரத்திற்கு முந்தையகால கட்டத்தின் பாலியல் தொழிலாளர்களின் சுதந்திரத்தை பேசும் அழுத்தமான வெப்தொடராக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. நடிகர்கள் மனிஷா கொய்ராலா, அதிதி ராவ் உள்ளிட்டப் பலர் இதில் நடித்திருந்தனர். கதைக்கேற்ற பிரம்மாண்டம், நடிகர்களின் நடிப்பு, ஆடை, அலங்காரம் ஆகியவை இந்தத் தொடரின் சிறப்பம்சங்களாக அமைந்தது. நடிகர்களுக்கு 300 விதமான ஆடைகள் மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நகைகள் என கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலாக பார்த்து பார்த்து இழைக்கப்பட்ட இந்தத் தொடர், இந்த வருடம் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது.

’மிர்சாபூர் - சீசன் 3’: அதிகாரப் போராட்டங்களையும் பழிவாங்கலையும் மையமாகக் கொண்ட இந்தத் தொடரின் முந்தைய இரண்டு சீசன்கள் வெற்றி பெற்ற நிலையில், இந்த வருடம் அமேசான் தளத்தில் வெளியான மிர்சாபூர் மூன்றாவது சீசனும் கவனம் ஈர்த்தது. குர்மித் மற்றும் ஆனந்த் ஐயர் இயக்கத்தில் பங்கஜ் சர்மா, அன்ஜூம் சர்மா உள்ளிட்டப் பலர் இந்தத் தொடரில் நடித்திருக்கின்றனர்.

’பஞ்சாயத்து - சீசன் 3’: கிராமப்புறத்தில் அரசாங்க பணிக்கு செல்லும் நாயகனுக்கு கிராமப்புற மக்களால் ஏற்படும் இன்னல்களை நகைச்சுவையான கதைக்களத்தில் கொடுத்து மக்களிடையே வரவேற்பைப் பெற்றது தீபக் குமார் மிஸ்ராவின் ’பஞ்சாயத்து’. அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இது தமிழிலும் ‘தலைவெட்டியான் பாளையம்’ என ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

’கியாரா கியாரா’: ஜீ5 தளத்தில் வெளியான தொடர் ‘கியாரா கியாரா’. வெவ்வேறு காலவரிசைக்கு பயணிக்கும் ஒரு அறிவியல் புலனாய்வு த்ரில்லர் தொடராக ’கியாரா கியாரா’ மக்களை கவர்ந்தது. இந்த தொடர் கொரிய நாடகம் 'சிக்னலின்' தழுவலாகும்.

’சிட்டாடல்: ஹனி பனி’: கொலைகாரர்களிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற போராடும் தாயின் போராட்டத்தை ஸ்பை த்ரில்லர் கதைகளத்துடன் விறுவிறுப்பாக கொடுத்தார்கள் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே. இது சிட்டாடல் இணைய தொடரின் ப்ரீகுவலாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. சமந்தா, வருண் தவானின் அட்டகாசமான நடிப்பும் பரபர ஆக்‌ஷன் காட்சிகளும், சமரசமில்லாத மேக்கிங்கும் இந்தத் தொடருக்கு பெரும் பலமாக அமைந்தது.

’கில்லர் சூப்’: பலவித எமோஷன் கலந்த பிளாக் காமெடி த்ரில்லர்தான் ‘கில்லர் சூப்’ என்ற இந்தி வெப் சீரிஸ். அனந்த் திரிபாதி, ஹர்ஷத் நளவாடே, உனேசா மெர்ச்சண்ட் ஆகியோருடன் இணைந்து எழுதி இயக்குநர் அபிஷேக் சவுபே இயக்கியிருக்கும் இந்த வெப் சீரிஸ் 8 எபிசோட்களைக் கொண்டிருக்கிறது. 2017-ம் ஆண்டு தெலங்கானாவில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட சீரிஸ் இது. நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் இந்தத் தொடரில் கொங்கோனா சென் சர்மா, மனோஜ் பாய், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

x