சென்னை: வருங்கால ‘சூப்பர் ஸ்டார்’, ‘தளபதி’ என ரசிகர்கள் கோஷமிட நடிகர் சூரி பதறிப்போயிருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. திருச்சியில் உள்ள திரையரங்கு ஒன்றில் படம் பார்த்து ரசிகர்களுடன் கலந்துரையாடி இருக்கிறார் சூரி.
அவர் பேசியிருப்பதாவது, “படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களுக்கு, நிச்சயம் ஒரு வலி மிகுந்த உணர்வைத் தரும். ‘விடுதலை2’ திரைப்படம் கமர்ஷியலை தாண்டி, மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் இந்த படத்தில் இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும். இந்த படத்துக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து, ’விடுதலை3’ படம் எடுப்பது குறித்து பார்ப்போம்.
’விடுதலை2’ படத்தில் வாத்தியார் யார் என்பது குறித்து விரிவாக இருக்கும். நானும் இந்த படத்தில் இருப்பேன். இந்தத் திரைப்படம் அனைவரின் வாழ்வோடு ஒன்றிணையக் கூடியதாக இருக்கும். அடுத்தடுத்த படங்களில் கதை நாயகனாகவே பயணிப்பேன். நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணைந்து நடிப்பேன்” என்றார்.
நடிகர் சூரி பேட்டி கொடுத்த போது, அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள், அவரை, ’வருங்கால சூப்பர் ஸ்டார்’, ‘அடுத்த தளபதி’ என்று கோஷம் எழுப்பினர். உடனே அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்ட நடிகர் சூரி, "அதெல்லாம் வேணாம். இப்படியே உங்களில் ஒருவனாக இருந்தாலே போதும்" என்று மீண்டும் அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.