பிரபல நகைச்சுவை நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் (65) இன்று காலை காலமானார்.
கராத்தே, பாக்ஸிங்கில் சிறுவயது முதலே ஆர்வம் கொண்டவர் கோதண்டராமன். ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராகச் சேர்ந்து பின்பு ஸ்டண்ட் மாஸ்டராக உயர்ந்தார்.
’ஒன்ஸ்மோர்’, ‘எல்லாமே என் ராசா தான்’ உள்ளிட்ட பல படங்களில் கடந்த 25 வருடங்களாக சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, மறைந்த நடிகர் முரளியுடன் அதிக படங்களில் பணியாற்றியுள்ளார்.
சண்டைப் பயிற்சியாளராக மட்டுமல்லாது நடிகராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘கலகலப்பு’ திரைப்படம் நடிகராக இவருக்கு புதிய அடையாளத்தினைக் கொடுத்தது. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இவர் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.