புதுச்சேரி அரசுக்கு சொந்தமான கட்டிடத்தை தான் விலை கேட்கவில்லை என இயக்குநர் விக்னேஷ்சிவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ்சிவன் தற்போது 'LIK' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி சமீபத்தில் அங்கு சென்றிருந்தார். அந்த மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசுக்கு சொந்தமான சீகல் ஹோட்டலை அவர் விலைக்குக் கேட்டதாகவும் ஆனால், அமைச்சர் அதை மறுத்துவிட்டார் எனவும் செய்தி வெளியானது.
இது குறித்து இயக்குநர் விக்னேஷ்சிவன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார், ‘பாண்டிச்சேரி விமான நிலையத்தைப் பார்த்துவிட்டு எனது 'LIK' படத்தின் படப்பிடிப்பிற்கான அனுமதி கேட்கவே அங்கு சென்றேன். அப்போது மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரையும் சந்தித்து பேசினேன்.
நான் கிளம்பி சென்ற பிறகு அங்கு வந்த லோக்கல் மேனேஜர் தனக்காக என்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார். அந்த விஷயம், தற்செயலாக என்னுடன் இணைக்கப்பட்டு விட்டது. இதற்காக இணையத்தில் வரும் மீம்ஸ்கள் எல்லாம் வேடிக்கையாக இருந்தது. எனக்கு உத்வேகமாகவும் இருந்தது. இருந்தாலும் இது தேவையில்லாதது என்றே நினைக்கிறேன். இது தான் நடந்த உண்மை’ என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.