ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அர்த்த மண்டபத்திற்குள் நுழைய முயன்ற போது இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று மார்கழி மாத பிறப்பையொட்டி, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்றிருந்தார். பின்பு, அங்கு சுவாமி தரிசனம் செய்த அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டாள் கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்திற்கு செல்லும்போது அங்கிருந்த ஜீயர்களும் பக்தர்களும் அவரைத் தடுத்து நிறுத்தினர். வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக சொல்லப்பட்டது.
இதனால், வெளியே வந்த இளையராஜா மண்டபத்தின் படி அருகே நின்று சுவாமி தரிசனம் செய்தார். இந்த சம்பவம் இளையராஜா ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையாகி இருக்கிறது. உற்சவர் வீற்றிருக்கும் கருவறை மட்டுமின்றி அர்த்த மண்டபமும் கருவறையாக பாவிப்பதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.