சிறையில் இருந்து விடுதலை: அல்லு அர்ஜுன் வேதனை


அல்லு அர்ஜுன் 2, கடந்த 5-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் சிறப்புக்காட்சி, 4-ம் தேதி இரவு ஹைதராபாத்திலுள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது. இதைக் காண ரசிகர்கள் கூடினர். அப்போது அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது. தள்ளு முள்ளு ஏற்பட்டதில் நெரிசலில் சிக்கி ரேவதி (35) என்ற பெண் உயிரிழந்தார். அவர் மகன் படுகாயம் அடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன், திரையரங்க உரிமையாளர், மேலாளர், ஊழியர் உள்ளிட்டோர் மீது சிக்கடபள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சத்தை இழப்பீடாக அறிவித்தார், அல்லு அர்ஜுன். பின்னர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இது தெலுங்கு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கைதுக்கு கண்டனங்கள் குவிந்தன.

கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூன், நாம்பள்ளி நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து சஞ்சல்குடா மத்திய சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டார்.

இதற்கிடையே தெலங்கானா உயர் நீதிமன்றம் அவருக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜாமீன் ஆவணங்கள் கிடைக்காததால் உடனடியாக அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. சிறையில் அவருக்கு 7697 என்ற கைதி எண் வழங்கப்பட்டது . ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு அர்ஜுன் நேற்று காலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டார். வீட்டுக்குத் திரும்பிய அவரை குடும்பத்தினர் ஆரத் தழுவி வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு எனது இரங்கலை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 20 வருடமாக பட ரிலீஸின் போது திரையரங்குகளுக்கு சென்று வருகிறேன். இதுபோன்று நடந்ததில்லை. இது நடந்திருக்கக் கூடாது” என்றார்.

அவரை, நடிகர்கள் நாக சைதன்யா, விஜய் தேவரகொண்டா, உபேந்திரா, ராணா, இயக்குநர் சுகுமார் உட்பட பலர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

x