திருவள்ளூர்: நடிகர் சிவகார்த்திகேயன் திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்.
கடந்த தீபாவளி பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படம் வெளியானது. மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்தாலும் சுமார் ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது. இந்தப் படத்தை அடுத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இதற்கடுத்து சுதா கொங்கரா மற்றும் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் படங்கள் நடிக்க இருக்கிறார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வர இருக்கும் நிலையில், இன்று திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மலர்மாலை விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.