நடிகர் தனுஷூக்கு எதிராக அறிக்கை வெளியிட்டது குறித்து நடிகை நயன்தாரா விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை ஒட்டி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல்’ டாக்குமெண்ட்ரி வெளியானது. இதில் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான்’ படக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக தடையில்லா சான்று பெறுவதற்காக அனுமதி கோரியிருந்தார் நயன்தாரா. ஆனால், அதற்கு அனுமதி தரப்படாததால் தனுஷூக்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பேசுபொருளானது.
இதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்திருக்கிறார் நயன்தாரா, “’நானும் ரெளடிதான்’ படமும் அதில் விக்னேஷ் எழுதிய பாடல் வரிகளும் எங்களுக்கு பர்சனல். அதை இந்த டாக்குமெண்ட்ரியில் பயன்படுத்த விரும்பினோம். அந்தப் படம் தனுஷூடையது. அதை தராமல் இருக்கும் உரிமை அவருக்கு உள்ளது. அதை நான் மறுக்கவில்லை.
ஆனால், படத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட ஒரு பாடலின் நான்கு வரிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று மிகவும் விரும்பினோம். அதற்காக தனுஷின் மேனேஜர், நண்பர்கள் எனப் பலரையும் தொடர்பு கொண்டோம். ஆனால், அவரை ரீச் செய்ய முடியவில்லை. அதையும் புரிந்து கொண்டு விலகினேன். டாக்குமெண்ட்ரியில் பயன்படுத்திய காட்சிகள் எங்கள் மொபைல் போனில் எடுத்த பிடிஎஸ். அதற்கான ஒப்பந்தம் இப்போது வரும் படங்களில் தான் போடப்படுகிறது. 10 வருடத்திற்கு முன்பு இல்லை.
அப்படி இருக்கும் போது, டாக்குமெண்ட்ரி டீசர் வெளியான பின்பு தனுஷ் தரப்பு எனக்கு நோட்டீஸ் அனுப்பியது கோபப்படுத்தியது. என் பக்கம் உண்மை இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும்? நானும் தனுஷூம் பரம எதிரிகள் இல்லை. நல்ல நண்பர்களாக தான் இருந்தோம். இடைப்பட்ட இந்த சில வருடங்களில் அது எங்கே தவறியது என்று தெரியவில்லை” எனக் கூறியிருக்கிறார்.