இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் கைவிடப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
பண்ணைப்புரத்துக்காரரான இளையராஜா, தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக கோலோச்சி வருகிறார். மூன்று தலைமுறை ரசிகர்களையும் தனது இசையால் ஈர்த்து வருகிறார். அவரது இசைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான முக்கிய சம்பவங்களை உள்ளடக்கிய பயோபிக்காக தனுஷ் நடிப்பில் ‘இளையராஜா’ படம் உருவாவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை கமல்ஹாசன் எழுதுவதாக இருந்தது. ஆனால், திரைக்கதை எழுதுவதில் இருந்து கமல்ஹாசன் திடீரென விலகி உள்ளார். தனுஷ் ‘குபேரா’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?’ படங்களை முடித்த பின்பு ‘இளையராஜா’ படத்தில் கவனம் செலுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாத நிலையில் படம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பட்ஜெட் பிரச்சினைகள் மற்றும் படக்குழுவினர் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இது குறித்து விரைவில் படக்குழுவினர் தெளிவுப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.