பிரபல பாலிவுட் நடிகர் கடத்தல்: பணத்திற்காக கட்டி வைத்து மிரட்டல்!


பணத்திற்காக பிரபல பாலிவுட் நடிகர் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலிவுட்டில் வெளியான ‘ஸ்ட்ரீ2’, ‘வெல்கம்’ போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் முஷ்டாகான். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த நவம்பர் 20 ஆம் தேதி மும்பையில் இருந்து டெல்லி சென்றிருக்கிறார் முஷ்டாகான். டெல்லி விமான நிலையத்தில் இருந்து அவரை ஒரு காரில் கடத்திச் சென்றிருக்கிறார்கள்.

டெல்லியின் மீரட் பகுதிக்கு செல்ல வேண்டிய கார், அந்த பகுதிக்கு செல்லாமல் டெல்லியின் புறநகர் பகுதிக்கு செல்லும் போது, தான் கடத்திச் செல்லப்படுவதை உணர்ந்திருக்கிறார் முஷ்டாகான். பணம் பறிப்பதை நோக்கமாகக் கொண்ட அந்த கும்பல், அவரிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்கள்.

அவரைக் கிட்டத்தட்ட 12 மணி நேரம் கட்டி வைத்து சித்திரவதை செய்து ரூ. 2 லட்சம் கேட்டிருக்கிறார்கள். தான் கட்டி வைத்திருக்கும் இடத்திற்கு அருகில் மசூதி இருப்பதை உணர்ந்த அவர் நேற்று அங்கிருந்து தப்பிச் சென்று மசூதியில் இருந்தவர்களிடம் உதவி கேட்டிருக்கிறார். அங்கிருந்த மக்கள் அவரை பிஜ்னூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தினை முஷ்டாகானின் நண்பரும் பிசினஸ் பார்ட்னருமான ஷிவம் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார். பிரபல நடிகர் பணம் கேட்டு கடத்தப்பட்ட சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

x