குடும்ப பிரச்சினையில் பத்திரிகையாளர்களை அடித்து விரட்டிய நடிகர் மோகன்பாபு!


மகனுடன் ஏற்பட்ட சொத்துப்பிரச்சினை காரணமாக செய்தி சேகரிக்க சென்றிருந்த பத்திரிக்கையாளர்களை தெலுங்கு நடிகர் மோகன் பாபு அடித்து விரட்டியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

பிரபல தெலுங்கு நடிகரும் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான மோகன்பாபு நேற்று செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அடித்து விரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையானது.

நடிகர் மோகன்பாபுவுக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு, லட்சுமி மஞ்சு ஆகியோர் வாரிசுகளாக உள்ளனர். இவர்கள் அனைவருமே தற்போது திரையுலகில் இருந்து வருகின்றனர். இதில் மகன் மனோஜ் மஞ்சுவும் அவரது மனைவி மோனிகாவும் இணைந்து மோகன்பாபுவின் சொத்துகளை அபகரிக்கத் திட்டமிட்டதாகவும் இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் நடிகர் மோகன்பாபு புகார் அளித்திருந்தார். இதோடு காவல்துறையினரின் பாதுகாப்பையும் கோரினார். இந்த விஷயம் பூதாகரமானது.

இந்த புகார் தொடர்பாக, செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் மோகன் பாபு வீட்டிற்கு நேற்று சென்றனர். அப்போது வெளியே வந்த மோகன்பாபு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் செய்தியாளர்களின் கையில் இருந்த மைக்கை பிடுங்கி அவர்களைத் தாக்கத் தொடங்கினார். பதிலளிக்க விருப்பமில்லை என்றால் அவர் வெளியே வரமால் இருந்திருக்கலாம், அல்லது பதிலளிக்க விருப்பமில்லை என்றும் சொல்லலாம். ஆனால் இவர் நடந்து கொண்டது அநாகரிகமானது என தெலங்கானா பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

x