சென்னை: மறைந்த சீரியல் நடிகர் நேத்ரன் மகள் அபிநயா தனது அப்பா குறித்து உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
'பாக்கியலட்சுமி', 'பொன்னி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகர் நேத்ரன். கடந்த 25 வருடங்களாக பல சின்னத்திரை தொடர்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குறிப்பாக, தனது மகள் மற்றும் மனைவியுடன் 'ஜோடி நம்பர்1', 'பாய்ஸ் vs கேர்ள்ஸ்' உள்ளிட்ட நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
கடந்த 6 மாதங்களாக நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த நேத்ரன், சீரியல்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி இவர் காலமாகியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்பாகவே அவரது மூத்த மகள் அபிநயா தனது சமூக வலைதள பக்கத்தில் நேத்ரன் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த விஷயத்தை வெளிப்படையாக தெரிவித்தார். இப்போது தனது தந்தை இறந்த பிறகு அபிநயா எமோஷனலான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ' உலகம் உங்களை ஹீரோவாக பார்க்க தவறிவிட்டது. ஆனால் நீங்கள் ஒருவர் மட்டும்தான் எங்களுக்கு இப்போதும், எப்போதும் பிடித்தமான ஹீரோ! நீங்கள் உங்கள் கனவை நிறைவேற்றாதது தவறு கிடையாது. அதை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்' என்று பதிவிட்டுள்ளார்.