சென்னை: ஜார்ஜியாவில் லெஜெண்ட் சரவணன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தொழிலதிபராக வலம் வந்த சரவணன் தனது கடை விளம்பரங்களில் தானே மாடலாக தோன்றி அசத்தினார். இதையடுத்து சினிமா துறையிலும் அவர் அடியெடுத்து வைத்தார். இரட்டை இயக்குநர்கள் ஜேடி & ஜெர்ரி இயக்கிய ‘லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலம் அவர் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இந்த படத்தின் கதை மற்றும் சரவணன் நடிப்பு இணையத்தில் டிரோல் செய்யப்பட்டது. இருந்தாலும் இந்த படம் ரூ. 20 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், 'கருடன்', 'எதிர்நீச்சல்' உள்ளிட்டப் படங்களை இயக்கிய துரை செந்தில் இயக்கத்தில், சரவணன் அடுத்த படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. படத்திற்காக தாடி வளர்த்து முரட்டுத்தனமான லுக்கிற்கு மாறியிருக்கிறார் சரவணன். நடிகை ஆண்ட்ரியா, நடிகர் சாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சரவணனுக்கு ஜோடியாக, நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்றது. அதை முடித்துவிட்டு இப்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சரவணன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் கையில் துப்பாக்கியுடன் இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்களை ஈர்த்துள்ளது.