அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் 'புஷ்பா 2'. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இரண்டே நாட்களில் சுமார் ரூ.449 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கு தெலங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. புதன்கிழமை இரவு நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி (39) என்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்தேன். அவர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவர்கள் துக்கத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். ரேவதியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குகிறேன். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளேன். விரைவில் குடும்பத்தினரை நேரில் சந்திக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்