சிரஞ்சீவியை சீண்டுகிறதா ‘புஷ்பா 2’ வசனம்? - உண்மை நிலையும், படக்குழுவினரின் எச்சரிக்கையும்!


ஹைதராபாத்: சிரஞ்சீவியை குறிப்பிடும் வகையில் ‘who is boss’ என்ற மாற்றியமைக்கப்பட்ட வசனம் இணையத்தில் பரவி வரும் நிலையில், ‘புஷ்பா 2’ படக்குழுவினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா 2’. முதல் நாளில் 294 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இதனிடையே, இப்படத்தில் உள்ள வசனங்களை மாற்றி இணையத்தில் சர்ச்சை உருவாக்கி வருகிறார்கள். இதற்கு இந்தப் படத்தில் வரும் ‘Who is Boss’ என்ற வசனமே காரணம். இதை வைத்து ரசிகர்கள் இணைய சண்டையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தரப்பில், “கற்பனையான, சுயமாக எழுதப்பட்ட வசனங்கள் ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்றதாக கூறி சமூக ஊடகங்களில் சிலர் பொய்யை பரப்பி வருகின்றனர். படத்துக்கு எதிராக எதிர்மறையான பிரச்சாரம் செய்ய சிலர் இதை செய்து வருகின்றனர். தயவு செய்து இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடாதீர்கள்.

சமூக ஊடகங்களில் இதுபோன்ற பதிவுகளை பகிர்வதை தவிர்க்கவும். திரைப்படத்தின் வசனங்களை தவறாக சித்தரிக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்கள். ஏனென்றால் ‘BOSS’ என்ற வசனம் சிரஞ்சீவியை குறிக்கும். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சிரஞ்சீவி குடும்பத்தினருக்கும், அல்லு அர்ஜுனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக இருவருமே எந்தவொரு பதிலுமே அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

x