'புஷ்பா2' கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்; ரூ. 25 லட்சம் நிதியுதவி அறிவித்த அல்லு அர்ஜூன்!


சென்னை: 'புஷ்பா 2' படம் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.

'புஷ்பா 2' திரைப்படம் நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இதில், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கத்தில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் வந்தனர். இவர்களை நேரில் பார்ப்பதற்காக அந்த திரையரங்கில் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஒரு கட்டத்தில் தடியடி நடத்த வேண்டிய சூழல் வந்தது. படம் பார்க்க தனது குடும்பத்துடன் ரேவதி என்ற 35 வயது பெண் வந்திருந்தார். இந்த கூட்டத்தில் அவர் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது ஒன்பது வயது மகன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வருத்தம் தெரிவித்திருந்தது. நடிகர் அல்லு அர்ஜுன் மீது மூன்று பிரிவுகளில் ஹைதராபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்தினருக்கு தன்னுடைய சார்பில் ரூ. 25 லட்சம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 'புஷ்பா 2' படக்குழுவினரிடம் இருந்து ரேவதியின் குடும்பத்தினருக்கு எந்த உதவியும் செய்ய தயாராக உள்ளதாகவும் அல்லு அர்ஜுன் கூறியுள்ளார். இந்த நேரத்தில் அவர்கள் வலியை உணர்ந்துள்ளதாகவும் விரைவில் அவர்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

x