பிரபல எழுத்தாளர், தேசிய விருது பெற்ற இயக்குநர் ‘குடிசை’ ஜெயபாரதி, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலை 6 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 77.
1979ஆம் ஆண்டு தமிழில் முதன்முறையாக கிரவுட் ஃபண்டிங் முறையில் இவர் தயாரித்து இயக்கிய ‘குடிசை’ படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் வென்று குவித்தது. இதனையடுத்து ‘ஊமை ஜனங்கள்’, ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’, ‘உச்சி வெயில்’, ‘நண்பா நண்பா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
கடந்த 2010ஆம் ஆண்டில் இவர் இயக்கிய ‘புத்திரன்’ படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் உட்பட தமிழக அரசின் மூன்று விருதுகள் கிடைத்தன. இவரது ‘நண்பா நண்பா’ படத்திற்காக வாகை சந்திரசேகருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வந்தாலும் கமர்ஷியல் சுழலுக்குள் சிக்காமல் மாற்று சினிமா பாதையிலேயே இயங்கி வந்தார் ஜெயபாரதி.
இந்நிலையில் இன்று காலை நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைப் பலனின்றி ஜெயபாரதி காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.