புதுச்சேரி: சர்வதேச ஆவணப்பட குறும்பட திருவிழா புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை துவங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் 35 குறும்படங்கள், ஆவணப் படங்களை பார்க்கலாம்
இதுதொடர்பாக விழா ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கூறியதாவது: “புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மின்னணு ஊடகம் மற்றும் வெகுஜன தொடர்பியல் துரை, இந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி திரைப்பட இயக்கம் இணைந்து புதுச்சேரியில் 12-வது சர்வதேச ஆவணப்பட, குறும்படத் திருவிழாவை நாளை (டிச.6) தொடங்கி 3 நாட்களுக்கு நடத்துகிறது. புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நேரு ஆடிட்டோரியத்தில் நிகழ்வு நடக்கிறது.
நாளை காலை தொடக்க நிகழ்வில் திரை இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன், அமைச்சர் லட்சுமி நாராயணன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உட்பட பலர் பங்கேற்கின்றனர். ஆனந்த் பட்வர்த்தனின் ‘த வேர்ல்ட் இஸ் பேமிலி’ திரைப்படம் மதியம் 2.15 மணிக்கு திரையிடப்படும். அதன் பின் நடக்கும் கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்பார். வரும் 7-ம் தேதி காலை 12 மணிக்கு இயக்குநர் சிவக்குமாரின் ‘செக் லிஸ்ட் பார் இன்டிபென்டன்ட் சினிமா’ உரையாடல் நடக்கும். பல நாடுகளைச் சேர்ந்த 35 குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்படும்” என்று ரவிசந்திரன் கூறினார்.