சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய் காரணமாக நேற்று இரவு காலமானார்.
’மருதாணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்தவர் நேத்ரன். தன்னுடன் பணிபுரிந்த சக நடிகை தீபா என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு அபிநயா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். இவர்களுடன் நேத்ரன் ‘ஜோடி நம்பர்1’, ‘பாய்ஸ் vs கேர்ள்ஸ்’ உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நேத்ரனின் மூத்த மகள் அபிநயா தனது தந்தை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை சமூகவலைதளத்தில் தெரிவித்தார். புற்றுநோய் பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே, சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார் நேத்ரன். இந்த நிலையில், நேற்று இரவு இவர் காலமாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது குடும்பத்திற்கு பலரும் தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.