மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி புதிய படம் உருவாகிறது. ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி சிவாஜியாக நடிக்கிறார். சந்தீப் சிங் இயக்குகிறார். படம் 2027-ம் ஆண்டு ஜன. 21-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே நடிக்க இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. சத்ரபதி சிவாஜியின் மனைவியான ராணி சாய் போஸ்லேவாக அவர் நடிக்க இருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை, எக்ஸ் தளத்தில் ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘இது வெறும் திரைப்படமல்ல. வலிமைமிக்க முகலாயப் பேரரசுக்குச் சவால் விடுத்து, மறக்க முடியாத பாரம்பரியத்தை உருவாக்கியவர் சிவாஜி. அந்த வீரரைக் கவுரவிப்பதற்கான முழக்கம்” என்று தெரிவித்துள்ளார். இயக்குநர் சந்தீப் சிங் கூறும்போது, ‘‘இந்தப் பாத்திரத்துக்கு ரிஷப் ஷெட்டி தான் எனது ஒரேதேர்வு. சத்ரபதி சிவாஜி மகாராஜின் வலிமை மற்றும் துணிச்சலை ரிஷப் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். இந்தப்படம் எனது பல வருடக் கனவு” என்று தெரிவித்துள்ளார்.