சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் இன்று நிவாரணப் பணிகளை வழங்கினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது. அவ்வாறு பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை தவெக தலைமை அலுவலகமான பனையூர் டி.பி. சத்திரம் பகுதிக்கு அழைத்து இன்று நிவாரணப் பொருட்களை வழங்கினார் தவெக தலைவர் விஜய். உப்பு, புளி, அரிசி என ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் வேட்டி, சேலைகள் இந்த நிவாரணப் பொருட்களில் அடங்கும்.
ஃபெஞ்சல் புயலால் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் எதிர்பார்த்ததைவிடவும் மோசமான சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வருவதற்கு பலரும் உதவிக்கரம் நீட்டிக் கொண்டு வருகிறார்கள். இதில் விஜயின் இந்த உதவி இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. அதே சமயத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரிடையாக சென்று நிவாரணப் பொருட்களை வழங்காமல் அவர்களை தன் இடத்திற்கு வரவைத்து விஜய் நிவாரணப் பொருட்கள் கொடுத்தது நியாயமில்லை. அரசியலுக்குள் நுழைந்த பிறகு களத்தில் நேரிடையாக இறங்க வேண்டும் எனவும் பலரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு பதில் கொடுக்கும் விதமாக, “உங்கள் இடத்திற்கே நேரில் வந்து நான் நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கலாம். ஆனால், அங்கு இப்படி அமர்ந்து பேச முடியாது. கூட்ட நெரிசல் ஏற்படும். நேரம் செலவிட முடியாது. நேரில் வரவில்லை என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என விஜய் அங்கு வந்தவர்களிடம் பேசியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.