நடிகர் அஜித்தின் ’விடாமுயற்சி’ படம் கதைத்திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதன் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் டீஸரில் இருந்து கதையை கணித்த ரசிகர்கள் இது ஹாலிவுட் படமான ‘பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக் என சொல்லி வருகிறார்கள். ஆனால், படக்குழு இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், ’பிரேக்டவுன்’ படத்தைத் தயாரித்த ஹாலிவுட் நிறுவனம் ‘விடாமுயற்சி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு இமெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதில், ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் மூலம் இது ‘பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக் என அறிகிறோம். எங்களிடம் முறையான உரிமம் பெறாமல் ரீமேக் செய்ததற்காக 15 மில்லியன் டாலர்கள் தர வேண்டும் என குறிப்பிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 15 மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.130 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.