பிரபல பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி வரும் 2025ம் ஆண்டோடு நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்த நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி அதன் பின்னர் திரையுலகில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். ’தில்ரூபா’, ‘சப்பாக்’ போன்ற ஹிட் படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘12த் ஃபெயில்’ திரைப்படமும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், புகழின் உச்சத்தில் இருக்கும் போதே தனது 37ஆவது வயதில் நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சினிமாவில் கடந்த சில வருடங்கள் எனக்கு சிறப்பாக அமைந்தது. உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. என் கரியரில் நான் முன்னேறிக் கொண்டிருக்கும்போது நான் கணவனாக, அப்பாவாக, மகனாக, நடிகனாக மீண்டும் வீட்டிற்கு செல்ல வேண்டிய தருணம் இது என்று உணர்கிறேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட எனது கடைசி இரண்டு படங்கள் இருப்பதால் 2025ல் கடைசியாக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ கடந்த மாதம் வெளியானது. படத்தை விளம்பரம்படுத்தும் நோக்கில் பாஜகவுக்கு ஆதரவாக விக்ராந்த் சொன்ன கருத்துகள் சர்ச்சையானது. இதனால், அவர் அந்தக் கட்சியில் இணையப் போகிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.