50 நிமிடம் பிரேக் இல்லாமல் கதை சொன்ன ஜேசன் விஜய் - மனம் திறந்த சந்தீப் கிஷன்!


சென்னை: நடிகர் விஜயின் மகன் ஜேசன் விஜய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் பற்றி நடிகர் சந்தீப் கிஷன் மனம் திறந்திருக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜேசன் விஜய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் குறித்தான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்தது. ஆனால், படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் நேற்று இந்தக் கதையில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தது. படத்திற்கு தமன் இசையமைக்க, ‘மாநாடு’ படப்புகழ் பிரவீன் கே எல் எடிட்டராக பணிபுரிகிறார்.

இந்தப் படம் குறித்து நடிகர் சந்தீப் கிஷன் தனது சமீபத்திய பேட்டியில் மனம் திறந்திருக்கிறார், “’ராயன்’ படத்தின் ரிலீஸூக்கு முன்பிருந்தே நானும் ஜேசனும் இந்தக் கதை குறித்து பேசி இணைந்து பணியாற்ற முடிவு செய்தோம். இந்தப் படத்தில் நிறைய ஆக்‌ஷனும் நகைச்சுவையும் இருக்கும். இடைவேளையே இல்லாமல் கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் ஜேசன் இந்தக் கதையை என்னிடம் சொன்னார். இந்தக் கதைக்கு அவர் கொடுத்திருக்கும் உழைப்பைப் பார்த்து நான் மிரண்டு விட்டேன். பான் இந்தியா கதைக்களமாக இது உள்ளது. ஜேசனின் கனவுக்கு நான் துணை நிற்பதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும்” என்றார்.

x