நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!


சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் ஓடிடியில் வெளியாவது குறித்தான அறிவிப்பு வந்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை அன்று ‘அமரன்’ படம் வெளியானது. மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது. படக்குழுவினருக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் முகுந்த் பயிற்சி பெற்ற சென்னை, ஆஃபிசர்ஸ் அகாடெமிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் முகுந்த் குடும்பத்தினர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். இதுமட்டுமல்லாது, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘அமரன்’ படம் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பலரது பாராட்டுகளைப் படம் பெற்றிருந்தாலும் சர்ச்சைகளும் எழாமல் இல்லை. முகுந்த் சாதியை மறைத்துவிட்டார்கள், காஷ்மீர் மக்களின் போராட்டத்தை சில காட்சிகள் கொச்சைப்படுத்தியது போன்றவை விவாதமாகின. இதனால், ‘அமரன்’ படம் திரையிடப்பட்ட சில திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

x