‘விடுதலை’க்கு 257 நாள் ஷுட்டிங்! - இயக்குநர் வெற்றிமாறன் தகவல்


வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, ராஜீவ் மேனன் உட்பட பலர் நடித்து வெளியான படம், ‘விடுதலை’. இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகி இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி, சூரியுடன் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். டிச. 20-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது கூறியதாவது: கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் இந்தப் படத்தை ஆரம்பித்தோம். 4 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தக் கதையை புரிந்து கொண்டு முழு நம்பிக்கையில் பயணித்த படக்குழுவுக்கு நன்றி. இதில் இளையராஜா சார் இணைந்தது என் அதிர்ஷ்டம். அவர் நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பார். நான் பத்து நிமிடம் தாமதமாகப் பார்க்கச் சென்றால் கூட, அதற்குள் 4 ட்யூன் போட்டு வைத்திருப்பார். விஜய் சேதுபதியிடம் 8 நாள்தான் கால்ஷீட் என இந்தப் படத்துக்கு அழைத்தேன். ஆனால் 2 பாகமும் சேர்த்து 257 நாட்கள் ஆகிவிட்டது. இதில் அவர் 120 நாட்கள் நடித்திருப்பார். அந்தப் பொறுமைக்கு நன்றி. சூரியும் நிறைய நாட்கள் நடித்திருக்கிறார். இந்தப் படம் மூலம் எல்லோரும் நிறைய கற்றிருக்கிறோம். மஞ்சு வாரியரையும் 3 நாட்கள் கால்ஷீட் என்றுதான் கூப்பிட்டேன். ஆனால், இப்போது அவருக்குப் படத்தில் 2 பாடல்கள் உள்ளன. இவ்வாறு வெற்றிமாறன் கூறினார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இளையராஜா, சேத்தன், பவானி ஸ்ரீ, கென் கருணாஸ், ராஜீவ் மேனன் என பலர் பேசினர்.

x