ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சொர்க்க வாசல்’. சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ், பல்லவி சிங் தயாரித்துள்ளனர். வரும் 29-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்குகிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசை அமைப்பாளர் அனிருத் வெளியிட்டனர்.
விழாவில், படத்தின் ஹீரோ ஆர்ஜே பாலாஜி பேசும்போது, “சொர்க்கவாசல் சிறப்பாக வந்திருக்கிறது. விற்பனை செய்வதற்காக, ஒரு கடைக்கு நாம் பிஸ்கட்டை எடுத்துச் சென்று விட்டால் அதை மற்றவர்கள், ‘நன்றாக இருக்கிறது, இல்லை’ என்று சொல்லத்தான் செய்வார்கள். அதேபோல் தான் சினிமாவும். படம் வெளியான பிறகு யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அது அவர்கள் சுதந்திரம். விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடம் இல்லை.
தற்போது அதிகமாகப் பயம் ஏற்படுகிறது. தேசியக்கொடியை கையில் ஏந்திக் கொண்டு இந்தியன் என்ற உணர்வோடு இருந்தால் கூட அதற்கும் ஏதாவது விமர்சனம் வருமோ என்ற பயம் ஏற்படுகிறது. நான் பாவாடையும் கிடையாது. சங்கியும் இல்லை. அனைத்து அரசியல் கட்சியின் ‘ஐ.டி. விங்’கிடமும் பணிவான வேண்டுகோளை வைக்கிறேன். நீங்கள் அரசியலை மட்டும் பாருங்கள், சினிமாவை விட்டுவிடுங்கள். அதை விமர்சித்து அழிப்பதில் எதற்காக உங்கள் ஆற்றலை வீணடிக்கிறீர்கள்” என்றார்.
இயக்குநர் செல்வராகவன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, கதாசிரியர்கள் தமிழ்பிரபா, அஸ்வின் ராமச்சந்திரன் உட்பட பலர் பேசினர்.