ரஹ்மானை பிரிந்தது ஏன்? - சாய்ரா பானு ஆடியோவில் விளக்கம்


சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது குறித்து விளக்கம் அளித்துள்ள சாய்ரா பானு, பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட ஆடியோ பதிவில், “நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. ரஹ்மானிடம் இருந்து பிரேக் எடுக்கவும் அதுதான் காரணம். ரஹ்மான் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என இந்நேரத்தில் யூடியூப் பதிவர்கள், ஊடக நிறுவனங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

ரஹ்மான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம். அவர் உலகின் சிறந்த மனிதர்; அற்புதமானவர். அவரது பிஸியான வேலைகளுக்கு இடையே அவருக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என நான் இங்கு வந்துள்ளேன். சிகிச்சை பெறுகிறேன். அவர் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அவரை நம்புகிறேன். விரைவில் சிகிச்சை முடிந்து நான் சென்னை திரும்புவேன். அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

விவகாரத்து அறிவிப்பு: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரஹ்மான் கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானுவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள், அமீன் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார். இவர்களின் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இதுபற்றி சாய்ரா பானு தரப்பில் அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்கள் கழித்து, தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரியும் கடினமான முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார். அவர்கள் உறவில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிபூர்வ அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தபோதும் இருவருக்கும் இடையே சிரமங்களும் தீர்க்க முடியாத இடைவெளியும் உருவானது. மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த சவாலான தருணத்தில் அவரின் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

சாய்ரா வழக்கறிஞரின் அறிக்கை வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாங்கள் 30 வருடத்தை எட்டி விடுவோம் என்று நம்பினோம். ஆனால், எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத்தான் இருக்கிறது.

உடைந்த மனங்களின் எடையில் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கக் கூடும். இருந்தாலும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் சேராமல் போனாலும் நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை கடக்கும் போது உங்களுடைய கனிவுக்கும், எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதிப்பதற்கும் நன்றி” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

x