’துருவங்கள் பதினாறு’ படம் இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’. ‘துருவங்கள் பதினாறு’ படம் வெளியான சமயத்தில் அந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்புப் பெற்றது. அதை இந்தப் படமும் தக்க வைத்திருக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.
வெற்றி (அதர்வா முரளி), செல்வம் (சரத்குமார்), வசந்த் (ரஹ்மான்) ஆகிய மூன்று முதன்மை கதாபாத்திரங்களை சுற்றி ஒரே இரவில் நடக்கும் விஷயங்கள் எப்படி அவர்களை தொடர்புபடுத்துகிறது என்பதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்.
திரைப்பட இயக்குநராகும் கனவில் இருக்கும் இளைஞர் அதர்வா முரளி. பல தயாரிப்பாளர்களிடமும் கதை சொல்லி கதை தேர்வாகாத விரக்தியில் இருக்கிறார். அப்போது அவரிடம் இருந்த கதையைத் திருடி ஒரு இயக்குநர் படம் எடுக்க முயல்கிறார். இன்னொரு பக்கம் தன்னுடைய வாத்தியார் ரஹ்மான் மகள் பார்வதியை (அம்மு அபிராமி) காதலிக்கிறார் ரஹ்மானுடைய மாணவர் ஸ்ரீ (துஷ்யந்த்). ஒரு நாள் காலை திடீரென அம்மு அபிராமி காணாமல் போகிறார். மூன்றாவது கதை சரத்குமாருடையது. ஒரு சீக்ரெட் மிஷனை செய்து முடிக்கும் பணியில் இருப்பவருக்கு அரசியல் பகை அவருக்கே வினையாக முடிகிறது. இந்த மூன்று சம்பவங்களும் எப்படி இவர்களை தொடர்புபடுத்துகிறது, இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதுதான் ‘நிறங்கள் மூன்று’ படத்தின் கதை.
நீண்ட நாள் கழித்து தன் நடிப்புத் திறனை காட்டக் கூடிய வாய்ப்பு அதர்வாவுக்கு. அதை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார். தன்னுடைய கதையை திருடி விட்டார்கள் என்ற செய்தி தெரிய வரும்போது கோபம், அழுகை, விரக்தி என அடுத்தடுத்து அவர் காட்டும் உணர்வுக்குவியல் கிளாஸ். கிளைமாக்ஸ் காட்சியில் தான் நடிப்பில் ஜீனியஸ் என்பதை நிரூபித்து இருக்கிறார் ரஹ்மான். அம்மு அபிராமியும் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்கிறார். த்ரில்லர் ஜானர் கதைக்கு தொழில்நுட்பக் குழு வலுவாக அமைந்திருக்கிறது. ஜேக்ஸ் பிஜாயுடைய இசை, டிஜோ டாமியுடைய ஒளிப்பதிவும் கதைக்குள் பார்வையாளர்களை அழைத்து செல்கிறது. ஸ்ரீஜித்துடைய எடிட்டிங் இரண்டாம் பாதியில் சில இடங்களில் தொய்வாக இருந்தாலும் முதல் பாதியில் கச்சிதம். விஎஃப்எக்ஸ், சிஜி பணிகளும் சிறப்பு.
மூன்று வெவ்வேறு மனிதர்கள், அவர்களுடைய பிரச்சினைகள் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு, பரபரப்பு என முதல் பாதியில் இந்த கதைகளை எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் பார்வையாளர்களுக்கு கொடுத்ததில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன். போதையினால் நடக்கக்கூடிய கெட்டதையும் இந்த ஹைப்பர் லிங்க் கதையில் திணிக்காமல் இயல்பாக கொண்டு வந்திருக்கிறார்கள்.
நடிகர் அதர்வாவின் கதாபாத்திர வடிவமைப்பு. சினிமாவில் இயக்குநராகும் ஆர்வம் கொண்ட இளைஞர் என்ற விஷயத்தை முன்னிறுத்தாமல் அவர் அளவுக்கதிகமான போதை வஸ்துகளை எடுக்கும் காட்சிகளே அவரது போர்ஷனில் நிறைந்திருக்கிறது. அதைப் பார்க்கும் நமக்கும் ஒருகட்டத்தில் தலைசுற்றுகிறது. அவர் குடும்பத்தை விட்டு பிரிவதற்கான காரணமும் சரியாக காட்டப்படவில்லை. அதேபோல, சரத்குமார் கதாபாத்திரம் இன்னும் வலுவாக அமைந்திருக்கலாம். அவருக்கான காட்சிகள் குறைவோ என்ற எண்ணமும் எழுகிறது. முதல் பாதியில் நம்மைக் கட்டிப் போட்ட திரைக்கதை இரண்டாம் பாதியில் பல இடங்களில் சறுக்குகிறது. குறிப்பாக, அதர்வா- துஷ்யந்த் சந்திக்கும் காட்சிகள், அதர்வா துஷ்யந்துக்கு உதவுவது, திடீரென அதர்வா காவல்நிலையத்தை அழைத்து அம்மு அபிராமி பற்றி கேட்டதும் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லாமல் விவரம் சொல்வது போன்ற காட்சிகள் எல்லாம் பலவீனமாக உள்ளது.