திரையுலகினர் விவாகரத்து செய்யும் போக்கு சமீபமாய் அதிகரித்து வருகிறது. நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த நிலையில் நேற்றிரவு ஏ.ஆர்.ரஹ்மான் தம்பதியர் விவாகரத்து செய்தி திரையுலகினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆதர்ஷ தம்பதியர் என்று கொண்டாடப்பட்ட ஜோடி 30 வருட திருமண வாழ்க்கைக்கு பின்னர் விவாகரத்து முடிவெடுத்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா, இமான், ஜி.வி.பிரகாஷ் துவங்கி ஏ.ஆர்.ரஹ்மான் வரை அடுத்தடுத்து இசையமைப்பாளர்கள் வரிசையாக விவாகரத்து செய்வது இசை ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதில் யுவன் சங்கர் ராஜா தனது இரண்டு மனைவிகளைப் பிரிந்திருக்கிறார். இதில் இரண்டு பேரையுமே யுவன் காதலித்தே திருமணம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷ் தனது பள்ளித் தோழியான சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் விவாகரத்துப் பெற்றோர். பள்ளி காலங்களில் இருந்தே சைந்தவியின் விருப்பு, வெறுப்புகள் ஜிவி பிரகாஷூக்கு தெரிந்திருக்கும் தானே?
இமான் விவாகரத்து செய்திகளில் வேறு விஷயங்கள் அடிபடுவதால் அதனை நிராகரித்தாலும் கூட பிரபல பாடகர் கிஷோர் குமார் மூன்று மனைவிகள் வரை விவாகரத்து செய்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.
பொதுவாக கலைத்துறையில் இருப்பவர்கள் அடுத்தடுத்த தேடல் என்று உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கான உலகம் வேறாக இருக்கிறது. அதனைப் புரிந்துக் கொள்ளும் பெண் மனைவியாக அமைவது எல்லாம் வரம் தான் என்கிறார்கள் திரையுலகினர்.
குடும்பத்தினருடன் நேரம் செலவிடாதது, தனிப்பட்ட உலகில் வாழ்வது, சின்ன சின்ன சந்தோஷங்களையும் தவற விடாதது என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் குழந்தைகளுக்காக என்று கருத்து வேற்றுமை இருந்தாலும் வாழ்ந்து வந்த தம்பதியருக்கு இடையே சமீபமாய் அடுத்தடுத்து வளர்ந்த பிள்ளைகள் இருக்கிற தனுஷ் - ஐஸ்வர்யா, ஜெயம்ரவி - ஆர்த்தி போன்றவர்களின் விவாகரத்து செய்திகள் நம்பிக்கை(?!) அளித்திருக்க கூடும்.
இப்படி செலிபிரிட்டிகளாக இருக்கும் தம்பதியர் அடுத்தடுத்து இப்படி விவாகரத்து கோரி நிற்பது சமூகத்திற்கு நல்லதில்லை என்கிறார்கள் உளவியலாளர்கள். தனுஷ், ஜெயம்ரவி விவாகரத்து செய்தி திரையுலகிலேயே பிடிப்பில்லாமல் வாழ்ந்து வரும் தம்பதியருக்குள் சலனத்தை ஏற்படுத்தியிருக்கும் போது பாமர மக்களிடையே ‘இனி குழந்தைகளின் நலனைவிட நம்ம சந்தோஷம் தான் முக்கியம்’ என்று விவாகரத்துக்கு துணிந்து நிற்பதையே அதிகரிக்க செய்யும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.