புதிதாக வெளியாகும் படங்களை, 2 வாரங்கள் விமர்சிக்கக் கூடாது என்று தடை உத்தரவு வாங்க, பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான திருப்பூர் சுப்பிரமணியம், தயாரிப்பாளர்களுக்கு யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
நான் 44 வருடம் திரைப்பட விநியோகஸ்தர் தொழிலில் இருக்கிறேன். பாலசந்தரின் ‘வானமே எல்லை’ படம் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதன் 100-வது நாள் விழாவை நானே நடத்தினேன். இதே போல இளையராஜாவுக்கு ‘முதல் மரியாதை’ பிடிக்கவில்லை என்று படித்திருக்கிறேன். ஆனால் மக்களுக்குப் பிடித்திருந்தது. ஒரு படம் பற்றி ஒவ்வொருவர் கருத்தும் மாறுபடும். ஒரு தலை ராகம், 16 வயதினிலே, அன்னக்கிளி போன்ற படங்களுக்கு முதல் 2 நாளில் ஓபனிங் இல்லை. பிறகு ‘நல்லாயிருக்கு’ என்று மக்கள் பேசிப் பேசி, அந்தப் படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. ஆனால் இன்று, முதல்நாள் அதிகாலையிலேயே மற்ற மாநிலங்களில் போய் படம் பார்த்துவிட்டு, வாய்க்கு வந்ததை விமர்சனம் என்று யூடியூபர்கள் சொல்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தை, வலியை தருகிறது.
இதுபோன்ற விமர்சனங்களால் திரைத்துறையினருக்கு பெரிய பாதிப்பு. இந்தியன் 2, வேட்டையன், இப்போது கங்குவா போன்ற படங்களின் வசூல் குறைந்ததற்கு இந்த விமர்சனங்களே காரணம். அதற்காக, நன்றாக இல்லாத படங்களைப் பார்க்க சொல்லவில்லை. ‘4 காட்சிகள் நன்றாக இல்லை, 4 காட்சிகள் நன்றாக இருக்கிறது’ என்று சொன்னால் கூட பரவாயில்லை. மொத்த படத்திலும் எது நன்றாக இல்லையோ அதை மட்டும் பெரிதாகச் சொல்லி, சினிமா தொழிலையே நாசம் செய்கிறார்கள். ஒரு ஓட்டல் முன் நின்று, ‘இங்க சாப்பிடாதீங்க, சாப்பாடு சுமாராகத்தான் இருக்கும்’ என்று சொல்ல முடியுமா?
கேரளாவில் ஒரு தயாரிப்பாளர், படம் வெளியாகி 2 வாரங்களுக்கு விமர்சனம் செய்யக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கி இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நம் பொருளைத் தரம் தாழ்ந்து விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. அதனால் நாமும் முதல் 2 வாரத்துக்குப் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என்று தடை உத்தரவு வாங்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.