சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. கடந்த 14-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன.
இந்நிலையில் நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவில் கூறி யிருப்பதாவது: இந்தப் பதிவை சூர்யாவின் மனைவியாக இல்லாமல் ஒரு சினிமா காதலராக எழுதுகிறேன். கங்குவா திரையுலகின் அதிசயம். ஒரு நடிகராக சினிமாவை முன்னெடுத்துச் செல்வதற்கான கனவை கொண்ட சூர்யாவை நினைத்துப் பெருமைபடுகிறேன்.
கங்குவா படத்தில் நிச்சயமாக முதல் அரை மணிநேரம் இரைச்சலாக இருக்கிறது. பெரும்பாலான இந்திய படங்களில் இருக்கும் குறைபாடுதான். மொத்த 3 மணி நேரத்தில் அரை மணி நேரம் மட்டுமே அப்படி இருக்கிறது. ஆனால் இந்தப் படம் சிறந்த சினிமா அனுபவத்தைத் தரு கிறது. இதன் ஒளிப்பதிவு , தமிழ் சினிமா இதுவரை பார்க்காதது.
ஊடகங்கள் மற்றும் சிலரின் எதிர்மறை விமர்சனங்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன் வந்த பெரிய பட்ஜெட் படங்களில் இடம்பெற்ற பெண்களை இழிவுபடுத்துவது , இரட்டை அர்த்த வசனங்கள், அதிக வன்முறை போன்றவற்றுக்கு இந்த அளவுக்கு எதிர்மறை விமர்சனங்களை வைக்கவில்லை.
கங்குவாவின் நேர்மறைகள் பற்றி ஏன் யாரும் பேசவில்லை? இரண்டாம் பாதியில் இடம்பெற்றுள்ள பெண்கள் பங்குபெறும் சண்டைக் காட்சி உள்ளிட்ட நல்ல பகுதிகளைப் பற்றிப் பேச மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். முதல் காட்சி முடியும் முன்பே, கங்குவாவுக்கு முதல் நாளில் இவ்வளவு எதிர்மறையை தேர்ந்தெடுத்தது வருத்தமளிக்கிறது. கங்குவா குழுவின் 3D உருவாக்க முயற்சிகளும் பாராட்டுக்குத் தகுதியானது. கங்குவா டீம் பெருமையாக இருங்கள். எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்கு எதுவும் செய்யவில்லை. இவ்வாறு ஜோதிகா தெரிவித்துள்ளார்.