நடிகை நயன்தாராவின் திரையுலக பயணம், காதல், திருமணம் குறித்த டாக்குமெண்ட்ரி ‘பியாண்ட் தி ஃபேரிடெல்’ என்ற பெயரில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் அவரது பிறந்தநாளான நவம்பர் 18 ஆம் தேதியன்று வெளியாகிறது.
இந்த டாக்குமெண்ட்ரியில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ்சிவனுடன் ‘நானும் ரெளடிதான்’ படப்பிடிப்பு தளத்தில் காதல் வயப்பட்ட கதையும் பகிர்ந்திருக்கிறார். மேலும், அந்தப் படத்தில் நயன்தாராவை மனதில் வைத்து விக்னேஷ் சிவன் பாடல்களும் எழுதியிருப்பார். இதை எல்லாம் டாக்குமெண்ட்ரியில் வைப்பதற்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி கொடுக்காமல் இரண்டு வருடங்களாக மறுத்திருக்கிறார். இதுபற்றி நயன்தாரா நீண்ட அறிக்கை ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் ‘அன்புள்ள திரு தனுஷ் கே ராஜா,
பல தவறான விஷயங்களைச் சரி செய்வதற்காக நான் உங்களுக்கு எழுதும் திறந்த கடிதம் இது. உங்கள் தந்தை திரு. கஸ்தூரி ராஜா மற்றும் உங்கள் சகோதரர், பிரபல இயக்குநர் திரு. செல்வராகவன் ஆதரவுடனும் ஆசிர்வாதத்துடனும் சிறந்த நடிகராக வலம் வரும் நீங்கள் இதை நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும். தொழில்துறையில் எந்தவித பின்னணியும் இல்லாத பெண்ணாக உள்ளே வந்து இன்று நான் உயர்ந்திருக்கும் நிலைக்கு பின்னால் பல போராட்டங்கள் சினிமாவில் இருந்திருக்கிறது. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்னுடைய ஆவணப்படம் நான் மட்டுமல்லாது எனது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் எதிர்பார்த்திருக்கும் ஒன்று. நாங்கள் குழுவாக இணைந்து எங்களுக்கு இருந்த அனைத்து சிரமங்களையும் கடந்து இந்த ஆவணப்படத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்.
எனது நெட்ஃபிலிக்ஸ் டாக்குமெண்ட்ரியில் பயன்படுத்த ’நானும் ரெளடி தான்’ படத்தின் சில காட்சிகள், பாடல் மற்றும் புகைப்படங்களுக்காக இரண்டு வருடங்கள் உங்கள் ஒப்புதலுக்காகக் காத்திருந்தோம். ஆனால், பல முறை உங்களிடம் கோரிக்கை வைத்தும் நீங்கள் அதை மறுத்ததால் அந்த காட்சிகளை கைவிடவும் டாக்குமெண்ட்ரியில் மீண்டும் திருத்தம் செய்யவும் முடிவு செய்தோம். இந்த ஆவணப்படத்தில் எனது வாழ்க்கை, என் காதல், திருமணம் பற்றி பல நினைவுகளும் படக்காட்சிகளும் இருக்கிறது. சினிமாத்துறையில் உள்ள என்னுடைய பல நலன் விரும்பிகள் இந்த டாக்குமெண்ட்ரிக்கு ஆதரவளித்து இதில் பங்கேற்றுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக என் வாழ்க்கைத்துணையை சந்திக்க காரணமாக இருந்த படம் இதில் இடம்பெறவில்லை. ‘நானும் ரெளடி தான்’ படத்தின் பாடல் வரிகள் உண்மையான உணர்வுடன் எழுதப்பட்டதால் அது இன்று வரை ரசிகர்களால் பாராட்டப்படுகிறது. எங்கள் ஆவணப்படத்தில் நாங்கள் பயன்படுத்தக்கூடிய சிறந்த விஷயமாக இது இருக்கும் என்பதை அறிந்தும் நீங்கள் அதைப் பயன்படுத்த எங்களுக்கு வாய்ப்பளிக்க மறுத்தீர்கள் என்பது எனக்கும் மிகவும் வருத்தமளிக்கிறது.
ஆனால், இதை நாங்கள் பெரிதுபடுத்தாமல் அந்தப் பகுதி இல்லாமலேயே எங்கள் டாக்குமெண்ட்ரியை வெளிக்கொண்டு வர முடிவு செய்தோம். எங்கள் வாழ்வின் மிக முக்கியமான, என்றென்றும் நிலைத்திருக்கும் இந்த டாக்குமெண்ட்ரியை எனது குழந்தைகளும் வருங்காலத்தில் பார்ப்பார்கள். அதில் எங்கள் மனதிற்கு நெருக்கமான படம் உங்கள் நியாயமற்ற முடிவால் இடம்பெறாமல் போகிறது. வணிக நிர்ப்பந்தங்களால் நீங்கள் மறுத்திருந்தீர்கள் என்றால் அதை எங்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், எங்கள் மீதுள்ள உங்களின் தனிப்பட்ட வெறுப்பினால் இந்த முடிவை எடுத்திருக்கிறீர்கள் என்பதுதான் என் கோபத்திற்குக் காரணம். உங்கள் ரசிகர்கள் முன்னிலையில் மற்றவர்கள் நலனில் அக்கறை உள்ளது போல காட்டிக் கொள்வீர்கள். ஆனால், நீங்கள் அப்படி இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
இன்னும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், டிரெய்லர் வெளியான பிறகு எங்களுக்கு நீங்கள் அனுப்பிய லீகல் நோட்டீஸ்தான். டிரெய்லரில் ‘நானும் ரெளடி தான்’ படப்பிடிப்புத் தளத்தில் நானும் எனது கணவரும் இருக்கும் 3 செகண்ட் காட்சி பற்றியதாகதான் உங்கள் கேள்வி உள்ளது. அந்த வீடியோ எங்கள் தனிப்பட்ட சாதனங்களில் படமாக்கினோம். இது ஏற்கனவே சமூகவலைதளங்களில் வைரலான ஒன்று. இதனை டாக்குமெண்ட்ரியில் பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடியை நஷ்ட ஈடாகக் கோரி உங்கள் புகழ், மரியாதையை குறைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் குணத்தையும் இது காட்டுகிறது. தயாரிப்பாளர் அனைவரின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் ஒரு பேரரசரா என்பதுதான் என் கேள்வி.
உங்களின் சட்டப்பூர்வமான நோட்டீஸை நான் பெற்றுள்ளேன். அதற்கு நாங்கள் சட்டப்பூர்வமாக பதிலளிப்போம். ’நானும் ரெளடி தான்’ படத்திற்கு நீங்கள் NOC கொடுக்க மறுத்தீர்கள். நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படத்திற்கு உரிமை தராததற்கு நீங்கள் நீதிமன்றத்தில் நியாயப்படுத்தப்படலாம். ஆனால், அதற்கு ஒரு தார்மீக பக்கம் உள்ளது என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அந்த குறிப்பிட்ட படத்தின் சில விஷயங்களை ஆவணப்படத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அங்குதான் எங்கள் காதல் மலர்ந்தது. மனிதர்கள் மரித்த பின்பு எல்லாமே இங்கு நினைவுகள்தான். அந்த இனிமையான நினைவுகளை கொடுக்கதான் ஆசைப்பட்டோம். ஆனால், அதை நீங்கள் செய்யவிடவில்லை.
என்னைப் போலவே எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாமல் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குநர், பாடலாசிரியர் விக்னேஷ் சிவனையும் என்னையும் டார்கெட் செய்து பரப்பும் வதந்திகளையும் நெகட்டிவிட்டியையும் நிறுத்துமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் இன்னமும் முகமூடி போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். இந்தப் படம் பற்றி நீங்கள் சொன்ன கசப்பான விஷயங்களை என்றுமே மறக்க மாட்டேன். ஆனால், ஒரு தயாரிப்பாளராக இந்த படம் உங்க கரியரில் மிகப்பெரிய ஹிட். இன்றும் பலரால் விரும்பப்படக்கூடிய ஒரு படமாக இருக்கிறது. பட வெளியீட்டுக்கு முன்பு நீங்கள் சொன்ன வார்த்தைகள் இன்றும் எங்களுக்கு ஆறாத வடுவாக இருக்கிறது. ஆனால் படம் வெளியான பிறகு அந்தப் படத்தின் வெற்றி உங்கள் ஈகோவை சீண்டி இருக்கிறது. ஃபிலிம்ஃபேர் 2016ல் இந்தப் படத்திற்கு விருது கொடுத்தது உங்களுக்கு அதிருப்தி என்பதை சாதாரண பொதுமக்கள் கூட எளிதில் கணிக்க முடியும். என் வளர்ச்சி மீது உங்களுக்கு இத்தனை வருடங்கள் பொறாமை இருந்திருக்கிறது என்பதை கண்கூடாக என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது. என் வளர்ச்சி உங்கள் வளர்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்காது என்ற போதிலும் என்னை கீழ் இறக்குவதில் ஏன் இத்தனை குறியாக உள்ளீர்கள்?
வணிகப் போட்டியைத் தவிர்த்து, பொது வாழ்வில் உள்ள முக்கிய நபர்கள் பெரும்பாலும்
மற்றவர்களின் அந்தரங்க வாழ்க்கைக்கு மரியாதை கொடுப்பார்கள். தமிழக மக்களும் அந்த கண்ணியத்தை கடைபிடிக்கிறார்கள். ஆனால், அந்த கண்ணியம் உங்களிடம் இல்லை. பத்து வருடங்களாக இந்த படம் மீதும், என் மீதும், என் வாழ்க்கை துணை மீதும் நீங்கள் வைத்திருக்க கூடிய வன்மம் எங்கள் வளர்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆனால், இந்தப் படத்திற்காக வேலை செய்திருப்பவர்கள் வாழ்க்கை பற்றியும் நீங்கள் யோசித்திருக்க வேண்டும்.
இக்கடிதத்தின் மூலம் நீங்கள் உங்கள் உள்ளத்துடன் சமாதானம் அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
கடந்த காலத்திலிருந்து உங்களுக்குத் தெரிந்த சிலரின் வெற்றியையும் உயர்வையும் நீங்கள் ஏளனம் செய்ய முடியாது. உங்களின் அடுத்த இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் சில பொய்யான கதைகளை புனைந்து அதை பன்ச் வசனத்துடன் சொல்லலாம். ஆனால், கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு 'schadenfreude’ என்ற ஜெர்மன் வார்த்தையை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அடுத்தவர்கள் துன்பத்தில் இருந்து மகிழ்ச்சியை அனுபவிப்பதை எங்களிடம் இருந்தோ அல்லது வேறு யாரிடம் இருந்தோ நீங்கள் எடுக்க முடியாது.
உலகம் மிகப் பெரியது. அதில் அனைவருக்கும் இடம் உண்டு. சினிமா பின்னணி இல்லாமல் வந்து சினிமாவில் ஒருவர் வெற்றி பெறுவதும் அவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது.
மற்றவர்களின் மகிழ்ச்சியை பார்க்கும் பொழுது நமக்கும் அந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பதே எங்கள் டாக்குமெண்டரியின் முக்கிய நோக்கம். வாழ்க்கை என்பது கொண்டாடப்பட வேண்டியதாகும்.
மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும். அதை நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் எப்போதும் சொல்வது போல்
#SpreadLove முக்கியமானது மற்றும் ஒரு நாள் நீங்களும் இதை சொல்பவராக மட்டுமல்லாமல் செய்பவராகவும் இருப்பீர்கள் என நான் நம்புகிறேன் மற்றும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
ஓம் நம சிவாய!' என அதில் தெரிவித்துள்ளார்.
#SpreadLove and Only Love