சென்னை: ரசிகர்களை தியேட்டரில் இருந்து தலைவலியுடன் அனுப்பக் கூடாது என ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, திஷா பதானி ஆகியோர் நடிப்பில் ‘கங்குவா’ படம் நேற்று வெளியானது. படத்திற்கு மோசமான விமர்சனங்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது. குறிப்பாக, இசை மற்றும் ஒலிக்கலவை தங்களுக்கு தலைவலியைக் கொடுப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதுபற்றி பிரபல ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ‘என்னுடைய சவுண்ட் டிசைனர் நண்பர் ‘கங்குவா’ படத்தில் இருந்து ஒரு கிளிப் அனுப்பி இருந்தார். இதுபோன்ற பிரபலமான படங்களில் ஒலி பற்றிய விமர்சனத்தை பார்ப்பது மனவருத்தமாக இருக்கிறது. இது யாருடைய குற்றம்? ஒலி பொறியாளரின் குற்றமா? கடைசி நேரத்தில் பதட்டத்தில் கூடுதல் விஷயங்களை சேர்க்க சொல்பவர்களின் குற்றமா? ஒலி கலைஞர் நாம் இப்போது இதைப்பற்றி கேள்வி எழுப்ப வேண்டும். பார்வையாளர்கள் தலைவலியுடன் வெளியேறினால் எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது’ எனக் கூறியிருக்கிறார்.