ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கறிஞர் கைது


இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, சத்தீஸ்கரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தி நடிகர் ஷாருக்கானுக்கும் கடந்த வாரம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை பாந்த்ரா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த தொலைபேசி அழைப்பில், ஷாருக்கானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதைத் தடுக்க ரூ.50 லட்சம் வேண்டும் என்றும் கூறப்பட்டது. இது தொடர்பாக, பாந்த்ரா போலீஸார் விசாரித்து வந்தனர்.

மிரட்டல் விடுத்த அந்த தொலைபேசி பெண், சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஃபைஸன் கான் என்பவருடையது என தெரியவந்தது. ராய்ப்பூர் சென்ற போலீஸார் அவரிடம் விசாரித்தனர். அவர், தனது தொலைபேசி நவ.2-ம் தேதி தொலைந்து விட்டதாகவும், இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். அதோடு, தனது தொலைபேசி எண்ணிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது தனக்கு எதிரான சதி என்றும் கூறினார். இந்நிலையில், ஃபைஸன் கானை கைது செய்த மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x