ஹைதராபாத்: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கவுள்ள புதிய படத்தில் அலியா பட்டை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தெலுங்கில் இந்தாண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கல்கி 2898 ஏடி’. இதனை இயக்கிய நாக் அஸ்வின் தனது அடுத்த படத்துக்கான கதை உருவாக்கிவிட்டார். அது நாயகியை முன்னிலைப்படுத்திய கதை என்பதால் அதில் நடிப்பதற்கு அலியாபட் உடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
அலியா பட்டும் சம்மதம் தெரிவிக்கவே, அதனை ‘கல்கி 2898 ஏடி’ படத்தை தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்போது ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு மேல் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இந்தாண்டு நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு உலகளவில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் இரண்டாம் பாகத்தை அலியா பட் படத்துக்குப் பிறகு இயக்க நாக் அஸ்வின் திட்டமிட்டு இருக்கிறார்.