சென்னை: 'அமரன்’ படத்தில் இடம்பெற்ற முழக்கம் சர்ச்சையானது பற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு ‘அமரன்’ படம் வெளியானது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் கதைதான் ‘அமரன்’. இதில் மேஜர் முகுந்தின் சாதியை வெளிப்படையாகக் காட்டாமல் திட்டமிட்டே மறைத்தார்கள் என்ற சர்ச்சை எழுந்தது. ஆனால், முகுந்த் குடும்பத்தார் கேட்டுக் கொண்டதன்படியே அதைத் திரைப்படத்தில் காட்டவில்லை என ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் கொடுத்தார்.
இதனையடுத்து, படத்தில் ராணுவ வீரர்கள் ‘பஜ்ரங் பாலி கி ஜெய்’ என்ற முழக்கமிட்டதும், சிறுபான்மையினரை ‘அமரன்’ தவறாக சித்தரிக்கிறது என்றும் சர்ச்சை கிளம்பியது. இதுபற்றி நேற்று பத்திரிகையாளர்களிடம் விளக்கம் கொடுத்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி, “இந்தப் படத்தின் சென்சார் அக்டோபர் கடைசி வாரத்தில்தான் நடந்தது. மத்திய பாதுகாப்புத் துறை மற்றும் ஏ.டி.ஜி.பி.ஐ இந்தப் படத்தைப் பார்த்து ஒப்புதல் அளித்தார்கள். ராணுவம் சம்பந்தப்பட்ட படங்களையெடுக்கும்போது அவர்களின் ஒப்புதல் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்யவே முடியாது. ஒரு சிலர் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள். ஒவ்வொரு ரெஜிமென்ட்டுக்கும் போர்க்குரல் இருக்கிறது.
`போல் பஜ்ரங் பாலி கி ஜே' என்பது ராஜ்புட் ரெஜிமென்ட்டின் 44 RR பெட்டாலியனின் போர்க்குரல். அதை நான் வேறு மாதிரி மாற்றி எடுத்தால் தவறாகிவிடும். அதை அப்படியே எடுத்தால்தான் சரியாக இருக்கும். எனக்கும் நிறையக் கருத்துகள் இருக்கிறது. அதை என்னுடைய கதாபாத்திரங்கள் மூலமாகத் திணிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய அரசியல் பார்வை, சொந்த கருத்துகளை எடுக்கும் படம் ‘அமரன்’ இல்லை. சமூகப் பொறுப்புடன் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என நம்புகிறேன்” என்றார்.