கோவை: ‘அமரன்’ திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நடிகர் கமல் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி 'அமரன்' திரைப்படம் வெளியாகியுள்ள அனைத்து இடங்களிலும் குடும்பம் குடும்பமாக இந்த திரைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் தியாக வரலாறு, தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் ஆழமாக சென்று சேருவதையும், மக்களிடம் தேசபக்தி பொங்கி எழுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாத சில சக்திகள், 'அமரன்' திரைப்படத்திற்கு எதிராக வன்மத்தை கக்கியுள்ளனர். 'அமரன்' திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியையும், சட்டம் - ஒழுக்கையும் சீர்குலைக்க சில அடிப்படைவாத அமைப்புகள் முயற்சிக்கின்றன. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். 'அமரன்' திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.