“ஆரியத்தை தான் எதிர்க்க வேண்டும்; திராவிடத்தை அல்ல” - சத்யராஜ் கருத்து


சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் ‘திராவிடமே தமிழர் அரண்’ என்கிற தலைப்பில் நேற்று நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கத்தை தலைமையேற்று பேசிய நடிகர் சத்யராஜ், “தமிழ் தேசியம் ஆரியத்தைத் தான் எதிர்க்க வேண்டுமே தவிர, திராவிடத்தை எதிர்க்க கூடாது. ஈழ விடுதலைக்கு பெரிய உத்வேகம் குடுத்தது திராவிட இயக்கங்கள் தான். திராவிடமும் தமிழ்தேசியமும் ஒன்று தான் என மேதகு பிரபாகரனே கூறியுள்ளார்.

ஆரியத்துக்கு துணை போனால் மீண்டும் சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் என மூடநம்பிக்கைகள் அதிகமாகும். தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ள இக்காலத்தில் நமக்கு இருமொழிக் கொள்கை தான் முக்கியம். தமிழ்நாட்டுக்கு வடமாநிலத்தவர் நிறைய பேர் வேலை பார்க்க வருகின்றனர். அவர்களுக்கும் திராவிடத்தை கொண்டு செல்ல வேண்டும்.வட மாநிலங்களில் சாதியப் பிரச்சினைகள் அதிகம். இங்கே வேலைக்கு வரும் பெரும்பாலான வட மாநிலத்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் இங்கே வேலை பார்க்க வருகின்றனர் என்றால், இங்கு சாதிய ஒடுக்குமுறை இல்லை, மதக் கலவரங்கள் இல்லை. நிம்மதியாக வாழலாம் என்று வருகின்றனர். இதற்கு திராவிடம் தான் காரணம் என்று புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று தமிழ்நாட்டைப் பற்றி பேசுவார்கள்” என்றார்.

தவெக முதல் மாநில மாநாட்டில் நடிகர் விஜய், “திராவிடமும் தமிழ் தேசியமும் கொள்கை அளவில் ஒன்றே” எனப் பேசியிருந்தது சர்ச்சைகளை எழுப்பியிருக்கும் நிலையில், கொள்கையளவில் இரண்டுமே எப்போதுமே ஒன்றாக முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனங்களைத் தெரிவித்து விமர்சித்திருந்தார். இந்நிலையில், திராவிடம் குறித்த நடிகர் சத்யராஜின் பேச்சு மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

x