கவுதம் கார்த்திக் நடித்த ‘ரங்கூன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. அடுத்து சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ படத்தை இயக்கினார். இதை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்தது.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்து அவர் இயக்கும் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்கிறார். தனுஷின் 55-வது படமான இது, அற்புதமான சினிமா அனுபவத்தை அளிக்கும் என்கிறது படக்குழு. இதற்கிடையே தனுஷ், நித்யா மேனன் நடிக்கும் ‘இட்லி கடை’, அடுத்த வருடம் ஏப்.10 -ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.