சென்னை: நடிகை அனுஷ்கா ஷெட்டியின் புதிய பான் இந்தியத் திரைப்படமான ‘காதி’ படத்தின் முதல் பார்வை வெளியாகிவுள்ளது.
’அருந்ததி’, ‘சிங்கம்’ என தமிழ்- தெலுங்கு திரையுலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா ஷெட்டி சினிமாவில் சிறிய பிரேக் எடுத்தார். இப்போது மீண்டும் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ’மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலி ஷெட்டி’ திரைப்படம் வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில், ’காதி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் என பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது. நடிகை அனுஷ்காவின்43 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் இன்று இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதிரடி தோற்றத்தில் மிரட்டலான அனுஷ்காவை அறிமுகப்படுத்தும் இந்த போஸ்டரில், அனுஷ்கா தலை மற்றும் கைகளில் இருந்து ரத்தம் சொட்டக் காணப்படுகிறார். நெற்றியில் சிவப்பு நிற திலகமிடப்பட்டுள்ளது. அவரது கண்ணீருடன் கூடிய கண்களும் இரண்டு மூக்கு வளையங்களும் அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை எடுத்து சொல்லும் விதமாக அமைந்துள்ளது. அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு விரைவில் வெளியிடும்.