'அமரன்’ பட சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுத்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!


சென்னை: ‘அமரன்’ படத்தை சுற்றி எழுந்த சர்ச்சைகளுக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பதிலளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இந்தப் படத்தில் மறைந்த மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதை வெளிப்படையாகக் காட்டி இருப்பது போல முகுந்த் வரதராஜன் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பதை ஏன் வெளிப்படையாகக் காட்டவில்லை எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சர்ச்சைகளுக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நேற்று மாலை நடந்த படத்தின் வெற்றி விழா நிகழ்வில் பேசியிருக்கிறார். “மேஜர் முகுந்த் வரதராஜன் தான் ஒரு தமிழன் மற்றும் பெருமைமிகு இந்தியன் என்ற அடையாளத்தையே எப்போதும் விரும்புவார். தன்னுடைய சான்றிதழ்களில் கூட எந்தக் குறியீடும் வேண்டாம் என்றே நினைப்பார். அதையே படத்தில் காட்டுங்கள் என்பதுதான் அவருடைய குடும்பத்தார் என்னை முதன்முதலில் சந்தித்தபோது வைத்த கோரிக்கை.

முகுந்த் அவரது தந்தையை ‘நைனா’ என்றும் அம்மாவை ‘ஸ்வீட்டி’ என்றும் தான் அழைப்பார். தமிழ் வேர்களைக் கொண்ட ஒரு நடிகரையே முகுந்தாக நடிக்க வையுங்கள் என்பதுதான் அவரது மனைவி இந்து வைத்த கோரிக்கை. அதற்கு சிவகார்த்திகேயன் சரியானவராக இருந்தார். முகுந்திற்கு கொடுக்கப்பட்ட விருதிற்கும் தியாகத்திற்கும் சரியான மரியாதையை ‘அமரன்’ படம் செய்திருக்கிறது என நம்புகிறோம்” என்றார்.

x