‘அமரன்’ வசூல் சாதனை - முதல் நாளில் ரூ.42.3 கோடி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


சென்னை: ‘அமரன்’ படம் முதல் நாளில் உலக அளவில் 42.3 கோடி வசூல் செய்திருப்பது மட்டுமன்றி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. சோனி நிறுவனம், கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தினை இயக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.

‘அமரன்’ பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. தமிழக முதல்வர், முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். இதனால் டிக்கெட் புக்கிங் இணையதளம் தொடங்கி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது ‘அமரன்’. 2024-ம் ஆண்டு ஒரு மணி நேரத்தில் அதிக டிக்கெட் புக்கிங் சாதனையினை ‘கோட்’ (32.16K) படத்தை சொற்ப வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளியிருக்கிறது ‘அமரன்’(32.57K).

மேலும், முதல் நாள் டிக்கெட் புக்கிங்கில் ‘கோட்’(584K) படத்துக்கு அடுத்த இடத்தினை பிடித்திருக்கிறது ‘அமரன்’ (480.55K). ’வேட்டையன்’(470K), ‘இந்தியன் 2’(403K), ‘ராயன்’(273K) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. அதேபோல் கேரளாவில் முதல் நாளில் 1.26 கோடி ரூபாய் வசூல் செய்து, அங்கு முதல் நாளில் அதிக வசூல் செய்த சிவகார்த்திகேயன் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. தெலுங்கிலும் இதர படங்களோடு ஒப்பிடுகையில் கணிசமாக வசூல் செய்து வருகிறது ‘அமரன்’.

தமிழகத்தில் 4 நாட்கள் விடுமுறை என்பதால் கண்டிப்பாக இதில் ஒட்டுமொத்த வசூலில் ரூ.100 கோடியைத் தாண்டும் என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள். உலகளவில் முதல் நாளில் 42.3 கோடி வசூல் செய்திருப்பதாக ‘அமரன்’ படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

x